பக்கங்கள்

Thursday, July 26, 2012

விவசாயி


இவரது பெயர் ராமசாமியோ- குப்பு சாமியோ- கோவிந்த சாமியோ இருக்க கூடும்.. பெயரில் என்ன இருக்கிறது..?? விஷயத்திற்கு வருவோம்... 


இவருக்கு வயது சுமார் எழுபத்தைந்து.. படிக்க வசதி இல்லாத காரணத்தால் தன்னுடைய தந்தை செய்த அந்த மானங்கெட்ட விவசாய பொழப்பை தேர்ந்தெடுத்தார் தன்னுடைய பதினான்கு வயதில்... இதோ உருண்டு ஓடி விட்டது அறுபதாண்டுகள்... இந்த அறுபதாண்டுகளில் இவர் இந்த நாட்டுக்கு என்ன கிழித்திருக்கிறார் தெரியுமா..???? 


தன்னுடைய ஒரு ஏக்கர் விவசாய நிலத்தின் மூலம் ஒரு போக விவசாயத்தின் மூலம் சுமார் 350 டன் நெல் உற்பத்தி செய்திருக்கிறார்... ( ஒரு போகத்திற்கு தண்ணீர் கிடைத்ததும், உரம் வாங்க கடன் வாங்குவதுமே பெரும் பாடாகி விட்டதால் இவரால் ஒரு போகத்திற்கு மேல் விளைவிக்க முடியவில்லை..) மேலும் அவ்வப்போது உளுந்து, எள் போன்ற தானியங்களை ஒரு குத்து மதிப்பாக சொன்னால் கூட 100 டன்கள் விளைவித்திருப்பார்..


சுமார் 400 தங்கள் தாவர, மிருக கழிவுகளை ரீசைக்கிள் செய்து உபயோகித்திருக்கிறார்... வீட்டு வரி, தண்ணி வரி, வாய்தாவரி என்ற வகையில் இந்த நாட்டுக்கு இவர் கட்டிய வரிகளில் இவர் ஒரு மாடி வீட்டை கட்டி இருக்க முடியும்.. ஆனாலும் அவைகளை இவர் ஒழுங்காக கட்டிய பாவத்தால் ஒவ்வொரு மழை காலத்திலும் ஒழுகும் கூரையை கூட நேரத்திற்கு மாற்ற முடிந்ததில்லை... 


இவரது தலையில் கட்டி இருக்கும் உருமா முழுதாய் இருக்கும் வரை இடுப்பில் வேட்டி என்ற பெயரில் இருக்கும்... அதுவே கந்தலாகி போனால் நீள நீளமாய் கிழிக்கப்பட்டு கோவணமாய் அவதாரமெடுக்கும்... ஆனால் நிச்சயம் அந்த கோவணத்தில் "இந்தியா" என்றோ.."சஹாரா.." :கிங் பிஷர்" என்றோ எழுதி இருக்காது...திருமணத்தின் போது கடனை வாங்கி தன்னுடைய மனைவி கழுத்தில் கட்டிய கால்பவுன் தங்கமும் அடகுக்கு போய் மூழ்கிவிட்டதால் மஞ்சள் கூட இழந்த கயிறு வெள்ளையாய் இளிக்கிறது... இவரது பாதுகாப்புக்கு ஒரு ரப்பர் செருப்பு கூட கிடைத்ததில்லை... இந்த பாவியை பற்றி பேசி நம் நேரத்தை ஏன் வீணடிக்க வேண்டும்..??
நமக்கு வேறு வேலை இருக்கிறது.. டெண்டுல்கருக்கு பாரத ரத்னா வாங்கி கொடுத்து அவரை மந்திரியாக்கி அழகு பார்க்க வேண்டும்.. அவரல்லவா இந்த நாட்டிற்காக உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்திருக்கிறார்..???


நன்றி - kblotry

No comments:

Post a Comment